Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

May 20, 2026

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

May 20, 2026

கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

May 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
Breaking

ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

ThanaBy ThanaMay 19, 2026No Comments9 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

 சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து பாதுகாப்புப் படையினரையும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றேன்.

 அவர்களது எதிர்பார்ப்பாக இருந்த ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் பாதையில் அச்சமின்றி, உறுதியுடன் முன்னோக்கிப் பயணிப்போம்.

 அனைத்து உயிர்கள் மீதும் எல்லையற்ற கருணை, அகிம்சை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தைப் பின்பற்றி நீண்டகாலமாக செயற்படும் நமது நாடு, இன மத பேதமற்ற மனிதநேயத்தைக் கொண்ட ஒரு நாடாகும்.

 இத்தகைய உன்னதமான மனித சமுதாயத்தைக் கொண்டு எவ்வளவு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்?

– ஜனாதிபதி

சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, ‘அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு’ என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம், ஒரு முன்மாதிரியான நாட்டை கட்டியெழுப்பும் உறுதியான பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனைத்து உயிரினங்கள் மீதும் எல்லையற்ற கருணை, அகிம்சை மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தைப் பின்பற்றி நீண்டகாலமாக இயங்கிவரும் நமது நாடு, இன மத பேதமற்ற மனிதநேயம் நிறைந்ததொரு நாடாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இத்தகையதொரு உன்னதமான மனித சமுதாயத்தைக் கொண்டு தலைசிறந்த தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பரஸ்பரம் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் அழிவுகரமான பழைய பாதைக்கு மாற்றுப் பாதையாக, நாட்டை ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை நோக்கி இட்டுச் சென்று, மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பாதையையே தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. அந்தப் பாதையில் அச்சமின்றியும் உறுதியுடனும் பயணித்து நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

பத்தரமுல்லையில் உள்ள படையினர் நினைவுத் தூபிக்கு அருகில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பெற்ற வெற்றியை நினைவுகூரும் தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நினைவு நிகழ்வில், இம்முறை அதிகளவிலான படையினர்களின் குடும்பத்தினருக்குப் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

அண்மைய வரலாற்றில் தாய்நாட்டை விடுவிப்பதற்காகத் தோள் கொடுத்த நமது படையினர்களுக்கு உயரிய மரியாதையையும் கௌரவத்தையும் செலுத்துவதற்காகவே நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

நாட்டுக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த படையினர்களை இந்த படையினர் நினைவுத் தூபிக்கு முன்னால் நினைவு கூருவதற்கும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கும், யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில் நாம் இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த அனைத்து படையினர்களயும் இந்தத் தருணத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றேன். தமக்காக அல்லாமல் பிறருக்காகவும் நாட்டுக்காகவும் உயிர்த்தியாகம் செய்து அவர்கள் ஆற்றிய சேவைக்கு இந்தத் தேசத்தின் கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, இவ்வாறான வீரமிக்க படையினர்களை இந்தத் தாய்நாட்டிற்கு அர்ப்பணித்த பெற்றோர்களுக்கு எமது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்த வேண்டும். இந்த நினைவு தின நிகழ்வில் நீங்கள் பல்வேறு வழிகளில் பங்கேற்றிருக்கலாம். இந்த படையினர் நினைவுத் தூபியில் பொறிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெயர்களுக்கு மத்தியில் நீங்கள் தேடுவது இழந்த உங்களது தந்தையாக இருக்கலாம். இல்லையெனில் உங்களது கணவனாக, காதலனாக, உறவினராக அல்லது சகோதரனாக இருக்கலாம். அல்லது உங்களது சிறந்த நண்பனாகவோ அல்லது நெருங்கிய தோழனாகவோ இருக்கலாம். அவர்கள் உங்களதும் எனதும் நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு பெரும் இலக்கை முன்வைத்தே தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

உயிரைத் தியாகம் செய்ததற்கு நிகராக, தமது உடல் உறுப்புக்களைத் தியாகம் செய்த எமது சகோதரர்கள் என்றும் எமது இதயங்களில் வீரர்களாக வீற்றிருப்பார்கள் என்பதை நான் கூற
விரும்புகிறேன். நீங்கள் செய்த உன்னதமான தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளின் பலனை இன்று நாம் நாடென்ற வகையில் அனுபவித்து வருகிறோம்.

உங்களது தியாகமும் அர்ப்பணிப்பும் இல்லாது போயிருந்தால், நாம் இன்னுமே அச்சம் நிறைந்த ஒரு தேசத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்போம். இந்தத் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் நீங்கள் பாரிய பங்கையாற்றிய தரப்பினராக வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அந்தத் தியாகத்திற்குள் இன்னும் பல இலக்குகள் பொதிந்துள்ளன. அந்த இலக்குதான் அமைதியான நாடொன்றை கட்டியெழுப்புவதாகும். யுத்தத்தையும் மோதல்களையும் கொண்ட ஒரு நாட்டை நிராகரிக்கும் முதன்மையான குழுவினர் நீங்கள்தான். யுத்தம் எவ்வளவு அழிவுகரமானது, பயங்கரமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, இந்தத் தாய்நாட்டில் யுத்தத்தை நிராகரித்து அமைதியை உருவாக்குவதற்கான மிகப்பெரிய குரலும், மிகப்பெரிய பிரார்த்தனையும் உங்களிடமே உள்ளது என்று நான் நம்புகிறேன்.

அதேபோல் ஓர் அபிவிருத்தியடைந்த நாடு நமக்குத் தேவை. இந்தத் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில், தாய்நாட்டை விடுவிப்பதைப் போன்றே நமது நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கும் உங்களிடம் இருந்தது. அத்துடன், முழுமையான நீதி நிறைந்த, சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு. உலகை வெல்லும் ஒரு நாடு என்பது அவர்களது இறுதிப் பிரார்த்தனையாக இருந்தது. அந்தப் பிரார்த்தனைகளுடன்தான் அவர்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். அவர்கள் பிரார்த்தித்த அந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்த படையினர் நினைவுத் தூபிக்கு முன்னால் நான் உறுதிபடச் சொல்கிறேன். அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றும் நான் சபதம் செய்கிறேன்.

ஒவ்வொரு வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. வீட்டு வாசலில் நின்று கொண்டு தனது தந்தை என்று வருவார் என காத்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இனி ஒருபோதும் தமது தந்தையின் பாசத்தைப் பெறும் பாக்கியம் கிடைக்கப் போவதில்லை. அதேபோல், தனது கணவனை இழந்த மனைவியரின் வேதனை அவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். மீண்டும் அவளுக்கு அவளது கணவன் கிடைக்கப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், இழந்த பிள்ளையின் நினைவுகளுடன் ஏனைய பிள்ளைகளுக்காக வாழும் தாய்களும் தந்தையர்களும் இருக்கிறார்கள். அந்தத் தாய்மார்களுக்கும் தந்தைமார்களுக்கும் தமது பிள்ளை மீண்டும் கிடைக்கப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த படையினர் நினைவுத் தூபியில் தமக்குரியவரைத் தேடுகிறார்கள். தமது இதயத்தின் ஆழமான இடத்தில் கணவன், பிள்ளை, சகோதரன் பதிந்துள்ளார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், இந்த படையினர் நினைவுத் தூபிக்கு முன்னால் உள்ள பெயரைத் தேடிக் கண்டுபிடித்து, நெஞ்சில் கைவைத்து அவர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

இந்த உணர்வுபூர்வமான நிலைமைக்கு நம்மால் ஒரு பதிலை வழங்க முடியுமா? இழக்கப்பட்ட அந்த வீரமிக்க படையினர்களை நினைவுகூருவதற்கு நம்மால் செய்ய முடிந்தது அவர்கள் செய்த பெறுமதிமிக்க அர்ப்பணிப்பிற்கு வணக்கம் செலுத்துவது மட்டும்தானா? இந்த அர்ப்பணிப்புகளை நினைவு கூருவதுடன் மட்டும் நாம் திருப்தியடைந்து விட முடியுமா? இந்த அர்ப்பணிப்புகளுக்கு மரியாதை செலுத்துவது மட்டும் போதுமானதா? அவர்கள் எதிர்பார்த்த அந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு உயிருடன் வாழும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆபத்தின் போதும், ஒவ்வொரு அச்சுறுத்தலின் போதும் அவர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக முன்னோக்கி வந்தார்கள். எதிரிகளின் அச்சுறுத்தலின் போதும் இயற்கை பேரழிவுகளின் போதும், அவர்கள் தமது உயிர்த்தியாகத்தின் மூலம் இணையற்ற சேவையை ஆற்றியுள்ளனர். யுத்தத்தின் போது நாட்டைக் காப்பாற்றுவதிலும், பேரழிவுகளின் போது உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்பதை நாம் அறிவோம். எனவே, அவர்கள் என்றும் எமது இதயங்களில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள் என்று உறுதிபடக் கூறலாம்.

கடந்த வருடம் நான் குறிப்பிட்டதைப் போல, நாம் ஒரு திருப்புமுனையில் நின்றுகொண்டிருக்கிறோம். அறியாமையை விட அறிவைத் தேட வேண்டும். பிளவுகளை விட ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். தேக்கநிலையை விட முற்போக்கை நோக்கி நகர வேண்டும். நான் அன்று கூறியது போலவே, இந்தத் திருப்புமுனையில் நமக்கு முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன. ஒரு பாதை, பரஸ்பரம் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் அழிவுகரமான பழைய பாதை. அடுத்த பாதை, இந்த நாட்டை ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை நோக்கி இட்டுச் சென்று மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பாதை. மிகவும் கடினமான தருணத்திலும் நாம் தேர்ந்தெடுப்பது இரண்டாவதாகக் குறிப்பிட்ட பாதையைத்தான் என்று நான் கருதுகிறேன். அந்தப் பாதையில் அச்சமின்றி, உறுதியுடன் பயணிப்பேன் என்று உங்கள் முன்னிலையில் உறுதியாக கூறுகிறேன்.

இந்த மாற்றத்திற்காக வரலாற்றில் முதல் முறையாக மக்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற, மக்களுக்கான ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளது. அந்த அரசாங்கம் சொல்லின் முழுமையான அர்த்தத்திலேயே மக்களுடையதாகும். நிச்சயமாகவே வருங்கால சந்ததியினருக்கானதாகும். இன்று நாம் மனிதாபிமானமிக்க இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டிருக்கிறோம். அந்தப் பயணம், மன உறுதி நிறைந்த தாங்கும் திறனின் தீப்பிழம்புகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு பயணம் என்பதை நினைவூட்ட வேண்டும். அந்தப் பயணம் அசாதாரணமான சிரமங்கள் மற்றும் இன்னல்களுக்கு மத்தியிலேயே அமைந்துள்ளது என்பதை நினைவூட்ட வேண்டும். ஆனால், இந்த கடினமான பயணத்தின் இறுதி நோக்கம் இந்நாட்டை ஒரு பிரகாசமான, முன்மாதிரியான நாடாக மாற்றுவதாகும் என்பதை நினைவூட்ட வேண்டும். இந்த படையினரின் பிரார்த்தனையும் அதுவேயாகும். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இன்று நாம் முன்னோக்கி கொண்டு செல்வது நமக்கிடையில் உள்ள பிரிக்க முடியாத மனிதாபிமான ஆன்மாவாகும். சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை நாம் மேம்படுத்தி வருகிறோம். நமது நாட்டை சட்டம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒரு நாடாக மாற்றியமைத்துள்ளோம். இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக தமது உயிரைத் தியாகம் செய்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரினதும் பிரார்த்தனைகளை நமது தோள்களில் சுமந்து கொண்டு, ஒரு முன்மாதிரியான நாட்டை கட்டியெழுப்பும் உறுதியான பயணத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

போரினால் உலகைத் துண்டு துண்டாக உடைத்தெறிய முடியும். ஆனால், அமைதியால் மட்டுமே உலகை ஒன்றிணைக்க முடியும். சடலங்களின் குவியல்களின் மேல் ஒரு மனித சமுதாயத்தை உருவாக்க முடியாது. இரத்த ஆறுகளுக்கு மத்தியில் அமைதியை கட்டியெழுப்ப முடியாது. வெடிக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு நிம்மதியான ஒரு நாட்டையோ அல்லது உலகையோ விட்டுச் செல்ல முடியாது. போர் என்பது ஒரு பேரவலம். எனவே, நாம் போரின் கதையை வரலாற்றிடம் ஒப்படைத்துவிட்டு, அமைதிக்கான நிலையான வழிபாட்டை தற்போதைய காலத்துடன் இணைத்துக் கொண்டுள்ளோம்.

எமது நாட்டின் முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் தங்களது கடமையை நிறைவேற்றினர். அவர்கள் பிரிவினைவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தனர். இந்த தாய்நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய நாம் அனைவரும் எந்தவொரு இடத்திலும் வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு தாய்நாடாகும். அந்த தாய்நாட்டை பிரித்தெடுப்பதற்கு எதிராகவே நீங்கள் போராடினீர்கள். அவர்கள் எந்தவொரு இனத்திற்கும் எதிராக யுத்தம் செய்யவில்லை. யுத்தத்தின் கொடூரமான விளைவுகளை அனைத்து இனத்தவர்களும் அனுபவிக்க நேரிட்டது. ஒரே நாட்டின் இளைஞர்கள் இந்த யுத்தத்தின் காரணமாக எமக்கு இல்லமல் போனார்கள்.

சுயநலமிக்க, அதிகார பேராசை கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாத நிகழ்ச்சி நிரல்களின் காரணமாக ஒரே நாட்டின் மனிதர்கள் இரண்டாகப் பிளவுபட்டனர்.

அரசியல் அநாகரிகமானது மனிதநேயத்தை ஒரு கால்பந்தாக மாற்றியது. இன்றும் சிலர் யுத்தம் நல்லதா, கெட்டதா என்று வாதிடுகின்றனர். நான் யுத்தம் நல்லதா, கெட்டதா என்று தீர்ப்பு வழங்கத் தயாராக இல்லை. ஆனால், மீண்டும் ஒருபோதும் யுத்தம் ஒன்று ஏற்படாதவாறு நான் பார்த்துக்கொள்வேன். என் முன்னால் இருக்கும் படையினரின் பிரார்த்தனையும் அதுவேயாகும். நானும் எனது அரசாங்கமும் முன்னிற்பது யுத்தம் நல்லதா, கெட்டதா என்று விசாரித்து ஆராய்வதற்காக அல்ல. நானும் எனது அரசாங்கமும் முன்னிற்பது மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு உறுதி செய்வதற்கே ஆகும். படையினரினதும் இந்நாட்டின் அனைத்து தேசப்பற்றுள்ள மக்களினதும் பிரார்த்தனை அதுவே என்று நான் நம்புகிறேன்.

அதேபோல் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேர்கர், மலாயர் ஆகிய அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமான வரப்பிரசாதங்களுடன் வாழ்வதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். மனித உரிமைகள், மனிதப் பொறுப்புகள், வரப்பிரசாதங்கள் அனைத்தும் அனைவருக்கும் ஒன்றே என்ற உணர்வு ஒட்டுமொத்த வாழ்விலும் உள்ளடக்கப்பட வேண்டும். நமது சமூகம் ஒன்று பேராதிக்க சக்திகளுக்கு முன்னால் மண்டியிட்டு வாழ்வதற்குப் பழகியிருந்தது, இல்லையெனில் அச்சத்துடன் வாழ்வதற்குப் பழகியிருந்தது. சில குழுக்களுக்கு சுதந்திரமான, ஜனநாயக நாடொன்றில் வாழ்ந்து பழக்கமில்லை. அவர்கள் மோதல்கள், அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளையே விரும்புகிறார்கள். ஆனால், நாம் ஒரு ஜனநாயக மற்றும் சுதந்திரமான நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

ஆற்றல், திறமை மற்றும் தகுதி உள்ள அனைவரும் முன்னோக்கி வரக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். விசேட வரப்பிரசாதங்களால் சுகபோகம் அனுபவித்த சிலருக்கு இது வேதனையளிக்கும் ஒரு விடயமாக இருக்கலாம். தான் விசேடமானவர் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை ஒடுக்கியவர்கள், இனிமேலும் தங்களுக்கு விசேடமான அங்கீகாரம் கிடைக்காது என்பதால் பதற்றமடையலாம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு தகுதி தராதரங்களைப் பாராமல் சட்டம் தங்களைப் பின்தொடர்வதைக் கண்டு அவர்கள் ஆவேசமடையலாம். ஆனால், நாம் முழுமையான நீதிக்காக நிபந்தனையின்றி அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான முறையில் நிறைவேற்றுவோம். மரணமடைந்த படையினரின் பிரார்த்தனையும் அதுவேயாகும்.

நாம் இந்த நிகழ்வை நடத்தும் இந்த மாதம், ஆன்மீக ரீதியாக மிகவும் விசேடமான ஒரு மாதமாகும். உலகிற்கு கருணை, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் செய்தியை வழங்கிய புத்த பெருமானின் போதனைகளை இந்த மாதத்தில் நாம் நினைவூட்டுகிறோம். பௌத்த தர்மமானது அஹிம்சை, அன்பு மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும் காட்டப்படும் எல்லையற்ற கருணையை அடிப்படையாகக் கொண்டது. நமது நாடு நீண்ட காலமாக இந்த உன்னதமான தர்மத்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. எனினும், தங்களது சொந்த அதிகாரம் மற்றும் தேவைகளுக்காக வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் மிகச்சிறியளவிலான குழுவினர் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இலங்கை தனக்கே உரித்தான பன்முகத்தன்மை கொண்ட கலாசாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை பல்வேறு இன, கலாசார, மத மற்றும் மொழி ரீதியான குழுக்களுக்கு சிறந்த புகலிடமாக விளங்கி வருகிறது. யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில், இலங்கை தனது வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீண்டெழுவதற்கு முயற்சித்து வருகின்றது. யுத்தம் என்பது மிகவும் வேதனையான அனுபவமாகும். அந்த வேதனையை நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்காமல் இருப்பதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். நிலையான அமைதி மற்றும் சகவாழ்விற்கான பாலங்களை நாம் அமைத்து வருகிறோம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது மற்றும் வேறுபாடின்மை ஆகியவற்றின் மூலம், அந்தப் பாலங்கள் நிலையான அமைதிக்கும் சகவாழ்விற்கும் பங்களிப்பு செய்கின்றன.

உலகப் புகழ்பெற்ற சிவனொளிபாதமலையை அனைத்து மத பக்தர்களும் வழிபடுகின்றனர். பொலன்னறுவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரத்தின் பௌத்த விகாரைகளுக்குள் இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன. கதிர்காமம் கோவில் பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. வடக்கே யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து தெற்கே கதிர்காமத்தில் முடிவடையும் புனித பாதயாத்திரையில் அனைத்து மத பக்தர்களும் ஒன்றிணைகிறார்கள். கிரிவெஹெரவை வழிபடச் செல்லும் பக்தர்கள் கதிர்காமக் கோயிலுக்கும் செல்கிறார்கள். இயற்கை பேரழிவின் போது, இன மத பேதமின்றி மனிதநேயமே மேலோங்கி நிற்கிறது. வறுமை அல்லது கஷ்டமான காலங்களில் மக்கள் எந்தவித வேறுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.

இவ்வளவு அற்புதமானதொரு மனித சமூகத்தைக் கொண்டு எவ்வளவு சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்ப முடியும்? நாம் அனுபவித்த அழிவுகளை வரலாற்றுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலகட்டம் உதயமாகியுள்ளது. நாம் பல தசாப்தங்களாக பொருளாதாரப் போரில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம். நாம் அந்தப் போரில் வெற்றி பெற வேண்டும். நாம் அந்தப் போரிலும் வெற்றி பெற வேண்டும். இளைய தலைமுறையினர் சுதந்திரமான,

இறையாண்மையுள்ள நாட்டை எதிர்பார்க்கிறார்கள். நாம் அதனையும் வென்றெடுக்க வேண்டும்.

நமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் நாம் மூழ்கியிருக்கிறோம். எதையும் அறியாத குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காதபோது, ஒரு நாடு தனது எதிர்காலத்தை எவ்வாறு வெல்ல முடியும்? நாம் அந்தப் போராட்டத்தை வெல்ல வேண்டும். ஒவ்வொரு பிரஜையையும் சமமாகவும் நீதியுடனும் நடத்துகின்ற, இந்த நாட்டை அனைவரும் தங்களது தாய்நாடாகக் கருதுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தை நாம் வெல்ல வேண்டும்.

பல தசாப்த காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்நாட்டின் இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைத்த அனைவருக்கும் எங்களது உன்னதமான கௌரவத்தை அர்ப்பணிக்கின்றோம். அதன்போது படையினர் ஆற்றிய சேவைகள் மகத்தானது. உங்களது அந்த உன்னதமான பணிக்காக உங்களுக்கு மீண்டும் மீண்டும் எங்களது கௌரவத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.

இனிமேலும் போரின் ஒரு வார்த்தையேனும் கேட்காத, அமைதி நிறைந்த சுதந்திரமானதொரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். அதேபோன்று, இனவாதத்தின் கூச்சல்களையும், மத தீவிரவாதத்தின் கூச்சல்களையும் மற்றும் குழப்பங்களை விளைவிக்கும் குழுக்களின் கூச்சல்களையும் நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நாடு எக்காரணம் கொண்டும் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது தீவிரவாதக் குழுவிற்கும் இரையாக இடமளிக்கக் கூடாது. அதற்காக நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, முப்படைத் தளபதிகள், முன்னாள் படைத்தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த மற்றும் காயமடைந்த படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தேசியவாதம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026

    நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

    May 20, 2026
    Editors Picks

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026

    நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

    May 20, 2026

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.