வெளிமடையில் மீண்டும் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்: வடிவேல் சுரேஷ் கடும் கண்டனம்!
வெளிமடையில் நேற்று (21)தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி சப்பாத்து கால்களால் தன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதே வேளை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிமடையில் நேற்று தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் அதே வேளையில், இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே தினத்தில், வெளிமடை டைரா (Dyra) தோட்டத்தில் தங்கேஸ்வரன் என்ற தொழிலாளி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
தங்கேஸ்வரன் என்பவர் சப்பாத்துக் கால்களாலும், மண்வெட்டிக் கம்பினாலும் தாக்கப்பட்டு, கால் முறிந்த நிலையில் தற்போது வெளிமடை இலக்கம் 5 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே நீலகாமத்தில் , உடசலாவை, ராகலை என பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். “அடித்தால் திரும்ப அடி” என்ற சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் எனக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர் சட்டத்தில் இதற்கான உரிய பாதுகாப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்களின் அரசியல் மற்றும் உரிமைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் அதே நேரத்தில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
