ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா
புத்த சாசனத்தையும் பௌத்த தர்மத்தையும் அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற உறுதி பூணுவோம்
நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் போது, மத மறுமலர்ச்சியும் அவசியமானதாகும்.
– ஜனாதிபதி
நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாதது எனவும், உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக அனைவருக்கும் உள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு, அதற்காகக் கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (27) முற்பகல் திஹகொட, மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பௌத்த தர்மம் தற்போது வாழும் நமக்கோ அல்லது காவி உடை தரித்து வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கோ மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், புத்த தர்மம் ஒட்டுமொத்த உலக மக்களின் விமோசனத்திற்காகவும் நன்மைக்காகவும் போதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீ புத்த ஆண்டு 2570 ஆவது வருடமான 2026 ஆம் ஆண்டின் அரச வெசாக் விழா”தக்ஷினா பிரபா” எனும் பெயரில் “அபித்தரேத கல்யாணே” எனும் தொனிப்பொருளின் கீழ், தேசிய வெசாக் வாரத்திற்கு இணைந்ததாக இன்று முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை மாத்தறை நகரத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
“தக்ஷினா பிரபா” தேசிய வெசாக் விழா, பூஜை வழிபாடுகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றுடன் மாத்தறை நகரில் நடைபெறுகிறது. இந்த வெசாக் வலயத்தினுள் புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி, மூத்த தர்ம உபதேசகர்கள் கலந்துகொள்ளும் தர்ம போதனைகள் மற்றும் தர்ம கலந்துரையாடல்கள், அத்துடன் தர்ம உரைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நகர மையத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான தோரணம், மாத்தறை கடற்கரைப் பூங்காவில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான வெசாக் கூடுகள் போட்டி, புறாத்தீவு அருகிலுள்ள கடற்கரையில் முப்படைகள் மற்றும் பொலிஸாரினால் வழங்கப்படும் பக்திப் பாடல் இசை நிகழ்ச்சி மற்றும் தென்னிலங்கையின் பாரம்பரியக் கலையைப் பிரதிபலிக்கும் பொம்மலாட்டக் காட்சிகள் உள்ளிட்ட பல கலாசாரக் கலை அங்கங்களை இந்த வெசாக் வலயம் கொண்டுள்ளது. மேலும், பல சிறப்பான மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களால் இது வண்ணமயமாக்கப்படவுள்ளதுடன், வானில் தோன்றும் பௌத்த சின்னங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் நவீன தொழில்நுட்பக் காட்சி, தென்னிலங்கைக்கே உரித்தான பொம்மலாட்டக் கலை மூலம் ஜாதக கதைகளை காட்சிப்படுத்துதல், LED திரைக்காட்சிகள் மூலம் நகரம் முழுவதும் டிஜிட்டல் முறையில் ஜாதக கதைகள் மற்றும் திரைப்படங்களைக் காட்சிப்படுத்துதல் ஆகியனவும் நடத்தப்படவுள்ளன.
தேசிய வெசாக் விழாவையொட்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியும் இங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன், இப்புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுவதிலும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
2570 ஆவது அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு முத்திரையும், மாத்தறை மாவட்டத்தின் மூன்று விகாரைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மூன்று வெசாக் நினைவு முத்திரைகளும் இங்கு வெளியிடப்பட்டதுடன், அதன் முதல் தபால்தலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
தென் மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில வழிபாட்டுத் தலங்களுக்கு, புனித பூமிக்கான காணிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் இங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
அரச வெசாக் விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இன்று நாம் கலந்துகொண்டிருப்பது இலங்கையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் முக்கியமானதுமான ஒரு நிகழ்விலாகும். புத்த பெருமான் இவ்வுலகில் தோன்றிய மிக உன்னதமான ஆன்மீக போதகர்களில் ஒருவராவார். அவருடைய பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் அடைதல் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளும் இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் அமைந்துள்ளன. அவருடைய இந்த முப்பெரும் புனித நிகழ்வுகளை நாம் நீண்டகாலமாகக் கொண்டாடி வருகின்றோம். பல நூற்றாண்டுகளாக அந்தத் தர்மம் அழியாமல் நிலைத்திருப்பதன் இரகசியம் என்ன? அவர் பரிநிர்வாணம் அடைந்து 236 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இன்றைய காலக்கட்டத்தில் இருந்து பார்த்தால் 2334 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த தர்மம் இலங்கைக்கு வருகை தந்தது.
2334 ஆண்டுகள் என்ற நீண்ட காலப்பகுதியாக அந்த பௌத்த தர்மம் அழியாமல், அதன் புனிதத்தைப் பாதுகாத்து நிலைத்திருப்பதன் இரகசியம், அவருடைய தர்மம் காரண-காரியக் கோட்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பதும், அதுவொரு யதார்த்தமான தர்மமாக இருப்பதுமே என்று நான் நினைக்கிறேன். அவரால் உணர்ந்துகொள்ளப்பட்ட தர்மத்தை, அவர் ஞானம் பெற்ற பிறகு வந்த முதலாவது எசல பௌர்ணமி தினத்தன்று 60 பிக்குகளுக்கு போதனை செய்தார்.
புத்த பெருமான் பலருடைய நன்மைக்காகவும் நலனுக்காகவும் இந்த தர்மத்தை போதனை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதாவது, இந்த தர்மம் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணி தர்மத்தில் உள்ள காரண-காரியக் கோட்பாடு ஆகும். இரண்டாவது காரணி, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் நன்கு கற்றறிந்த நம்முடைய மகா சங்கத்தினர் ஆவர். நீண்ட காலமாக இந்த தர்மம் வாய்மொழி மரபு மூலமாகவே நிலைத்திருந்தது. தர்மம் நூல் வடிவம் பெறும் வரை, சில நேரங்களில் ஒரு பிக்குவிற்கு இவை அனைத்தையும் ஒன்றாக நினைவில் வைத்திருப்பது கடினமான செயலாக இருந்திருக்கலாம். எனவே, வெவ்வேறு நிகாயாக்களின் படி பிரித்து, வாய்மொழி மரபு மூலம் அதனைப் பாதுகாப்பதற்காக தர்மதர, விநயதர மகா சங்கத்தினர் பெரும் அர்ப்பணிப்பைச் செய்தனர்.
இவ்வாறு தர்மமும் அதன் புனிதமும் அடிப்படை அழியாமல் பல நூற்றாண்டுகளாக நம்முடைய மகா சங்கத்தினர் வாய்மொழி மரபு மூலம் பாதுகாத்து முன்னோக்கி கொண்டு வந்தனர். அதன் பிறகு, வலகம்பா மன்னனின் ஆட்சிக் காலத்தில் திரிபிடகம் நூல் வடிவம் பெற்று எழுத்துப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டது.
இருப்பினும், இன்று விகாரையில் தர்ம நூல்கள் இருக்கின்றன. ஆனால், விகாரையில் இருக்கும் அந்தத் தர்ம நூல்களின் சாராம்சத்தை நமது பௌத்த மக்களிடம் கொண்டு சேர்ப்பது யார்? நமது மகா சங்கத்தினர் எவரும் தர்ம நூலைத் திறந்து, பக்கத்திற்குப் பக்கம் தர்மத்தை போதிப்பதை நான் கண்டதில்லை. நமது மகா சங்கத்தினர் தர்மத்தைக் கற்று, அந்த அறிவை ஒன்றுதிரட்டியே மக்களுக்குப் போதிக்கிறார்கள்.
1931 ஆம் ஆண்டின் விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளைத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று, தமது மகா சங்கத்தினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக, தர்ம நீதிமன்றத்திற்குரிய அதிகாரத்தை மீண்டும் வழங்குமாறும் கோரப்பட்டது. விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளைத் திருத்தித் தருமாறு மூன்று நிகாயங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரும் எனக்கு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக நமது அமைச்சர் ஒரு கருத்துக் குறிப்பை சமர்ப்பித்தார். அதற்கு அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்தது. அதற்கமைய, திருத்தமொன்று தயாரிக்கப்பட்டது.
எந்தவொரு திருத்தமும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதை நாம் அறிவோம். சட்டமா அதிபர் திணைக்களம் அதற்குச் சில திருத்தங்களை முன்வைத்திருந்ததுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நமது மல்வத்து, அஸ்கிரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் பதிவாளர் மகாநாயக்க தேரர்கள், பௌத்த விவகார ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதற்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். அந்தச் சந்திப்பில் இறுதி உடன்பாட்டை எட்ட முடிந்ததாகப் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர் எனக்குத் தெரிவித்தனர். எனவே, சங்க சபையை ஒழுக்கநெறியுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை மிக விரைவில் நாங்கள் உங்களுக்கு இயற்றித் தருவோம்.
இந்தத் தர்மமானது தற்காலத்தில் வாழ்கின்ற நமக்கோ அல்லது காவி உடை தரித்து வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கு மட்டுமோ சொந்தமானதொன்றல்ல. இந்தத் தர்மமானது நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த விமோசனத்திற்காகவும், நன்மைக்காகவும் போதிக்கப்பட்ட ஒரு தர்மமாகும். அப்படியென்றால், இந்தத் தர்மத்தின் சாராம்சம் அழிந்து போகாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.
எங்களது சோபித நாயக்க தேரர் சுட்டிக்காட்டியதைப் போல, இன்று தர்மத்தின் பெயராலேயே தர்மம் சிதைக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதற்காக ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும்? முற்காலத்தில் வாழ்ந்த அரசர்களைப் போல இதற்காக நடவடிக்கை எடுக்குமாறு அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு தர்மத்தையும் ஒழுக்க நெறிமுறைகளையும் நன்கு அறிந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினரின் ஆதரவு அவசியமாகும்.
அகில உலக மக்களின் விமோசனத்திற்காகப் போதிக்கப்பட்ட தர்மத்தைப் பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நான் அழைப்பு விடுக்கின்றேன். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் தீர்மானங்களாகவோ அல்லது அரசாங்கத்தின் தீர்மானங்களாகவோ அர்த்தப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் பௌத்தர்கள் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக இவை அர்த்தப்படுத்தப்பட்டால் தான் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். எனவே, அந்த நடவடிக்கைகள் நமது தர்மத்திற்காகவும், பௌத்த மக்களுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் எடுக்கப்பட்ட பௌத்த ரீதியான தீர்மானங்களாக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
நமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாக பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறோம். பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது, நாம் ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைகிறோம். இதுதான் நமது வரலாறு. நாம் ஆன்மிக ரீதியில் மறுமலர்ச்சி பெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், பொருளாதார ரீதியாகவும் நாம் எழுச்சி பெற்றிருந்தோம்.
நாம் பொருளாதார ரீதியாக வளம் மிக்க ஒரு நாட்டை நோக்கி பயணிக்கும் போது, மீண்டும் நமது நாட்டிற்கு ஆன்மிக மறுமலர்ச்சியும் அவசியமாகிறது. அந்தப் பொருளாதார மற்றும் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எனது மற்றும் நமது அரசாங்கத்தின் முயற்சியாகும்.
துட்டகைமுனு மன்னர் காலம், வசப மன்னர் காலம், மகாசேனன் மன்னர் காலம் மற்றும் பொலன்னறுவையின் முதலாம் பராக்கிரமபாகு மன்னர் காலம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், அவை ஆன்மிக ரீதியாக எழுச்சி பெற்ற காலகட்டங்களாக இருந்ததோடு, பொருளாதார ரீதியாகவும் செழிப்பான காலங்களாகத் திகழ்ந்தன.
எனவே, பொருளாதாரச் செழிப்பை கட்டிடங்கள், வீதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே பெற்றுவிட முடியாது. சமூகம் தார்மீக நெறிகளைப் பின்பற்றும், பரஸ்பர புரிதலைக் கொண்ட, மற்றவர்களை நல்மனதோடு பார்க்கத் தயாராக இருக்கின்ற, அத்துடன் வெறுப்பு, குரோதம் மற்றும் பொறாமை ஆகியவற்றை நிராகரிக்கின்ற ஒரு தார்மீகச் சமூகத்திற்குள் மட்டுமே நம்மால் அதற்கு இணையான பொருளாதார எழுச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த தார்மீக சமூகமும், பொருளாதார எழுச்சியும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். எனவே, இந்த யுகத்தை மீண்டும் இலங்கையில் மத எழுச்சி ஏற்பட்ட ஒரு யுகமாக வரலாற்றில் பதிவு செய்யும் தேவை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு இணையாக ஒரு பொருளாதார எழுச்சியும் எட்டப்படும் என்பதை நான் அறிவேன். அதற்காக ஒரு பாரிய அளவிலான வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
விசேடமாக, நவம்பர் மாதத்தில் உலக பௌத்த மகா மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அது நமது நாட்டின் மத எழுச்சியில் ஒரு பாரிய புத்துணர்ச்சியூட்டும் சந்தர்ப்பமாக அமையும் என்று நான் நம்புகிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத வழிபாட்டுத் தலங்கள் ஏதேனும் சிரமத்திற்கோ அல்லது பேரழிவிற்கோ உள்ளாகும்போது, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அதில் தலையிடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அறநெறி சார்ந்த மற்றும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைந்த ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், அதேபோன்று எமது மகா சங்கத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு என்னிடம் உள்ளது. விசேடமாக, இந்த பௌத்த மதத்திற்கும் எமது சமூகத்திற்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு வரலாற்றுப் பிணைப்பு உள்ளது. இன்றைக்கு 2334 வருடங்களுக்கு முன்னர் பௌத்த மதம் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்பு இலங்கையில் எவ்வாறானதொரு சமூகம் இருந்தது? அவ்வாறானதொரு சமூகம் மற்றும் கலாசாரத்திற்கு உரிமைகொண்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கான மகா சக்தி இந்த தர்மத்திற்குள் இருக்கிறது, இந்த தர்மம் எமது நாட்டுக்குள் பரவியதன் மூலம் அது சாத்தியமானது. அப்படி இல்லாதிருந்தால், நாம் எவ்வாறானதொரு கலாசாரத்திற்கு உரிமைகொண்ட ஒரு இனம் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாம் மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு உருகும் ஒரு இனமாகும். ஒரு ஆபத்தின் போது யாரும் இனம், குலம், மதம் என்று பார்ப்பதில்லை. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இரக்கம் ஏற்படுகிறது.
பௌத்த மதம் மற்றும் நமது சமூகத்தை கட்டியெழுப்புவது குறித்த ஒரு வரலாற்று பாரம்பரியமும், கதையும் உள்ளது. பௌத்த மதத்தை நீக்கிவிட்டு, இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கக்கூட முடியாது. நமக்கு கிடைத்தது ஒரு தர்மம் மட்டும்தானா? அந்த தர்மத்துடன் இணைந்து உருவான ஒரு முறையான கல்வியும் நமக்குக் கிடைத்தது. இன்றும் நமது நாட்டில் மிக உயர்ந்த, சிறந்த கல்வி முறை ஒன்று உள்ளது. பிறக்கும் குழந்தைகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள். அது மிகச்சிறந்த ஒரு மதிப்பாகும். நாம் எழுத்தறிவில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடாவோம்.
நமது நாட்டின் கல்வியின் முதல் படி, மகிந்த தேரரின் வருகையோடுதான் எடுத்து வைக்கப்பட்டது. அசையாது நிலைபெற்றுள்ள மகா பிரிவெனாக்கள் மற்றும் மகா விகாரைகளை மையமாகக் கொண்டு ஒரு கல்வி முறை கட்டியெழுப்பப்பட்டது. நமக்கு ஒரு சிங்கள பாரம்பரிய மருத்துவ முறை கிடைத்தது. வரலாற்றில் நமக்கு மருத்துவம் தெரிந்த பௌத்த துறவிகள் இருந்தார்கள். வரலாற்றுத் கதைகளில் மிகவும் ஆச்சரியமான மருத்துவத் துறவிகளை நாம் காண்கிறோம். புராதன மருத்துவத்தின் தோற்றுவாயும் இந்த விகாரை, மகா சங்கத்தினர் மற்றும் இந்த தர்மமே ஆகும்.
மாபெரும் கட்டிடக் கலைஞர்கள், இந்த தர்மத்தோடு ஒன்றிணைந்தே பாரிய படைப்புகளை உருவாக்கினர். இன்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆச்சரியமான படைப்புகளுக்கு உரித்துடைய, பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு பொறியியல் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. எனவே, இலங்கை தேசம் பெருமைமிக்க, கலாச்சாரப் பண்புடைய, விருந்தோம்பலை விரும்பும் ஒரு தேசமாக மாறுவதற்கு இந்த தர்மம் பெரும் பக்கபலமாக இருந்தது. இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் மஹிந்த தேரரின் வருகையே என்று நான் நம்புகிறேன். இந்த உன்னதமான தர்மத்தை சிதைப்பது நம் ஒவ்வொருவருக்கும் வேதனையளிப்பதாகும். இந்த தர்மத்தின் சிதைவுக்கு மத்தியில், ஒழுக்கமுள்ள பௌத்த துறவிகளின் வீழ்ச்சி நமக்கு வேதனையைத் தருவதாக அமைகிறது.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நமது பௌத்த தேரர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நான் மூன்று பீடங்களின் மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினேன். ‘முடிந்தால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவர்களைத் துறவறத்தில் இருந்து நீக்குங்கள்’ என்ற கருத்தையே அவர்கள் முன்வைத்தார்கள். தேரர்களை விலங்கிட்டு வரிசையாக நாம் எவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது? உண்மையில் மூன்று பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் அதற்கு உடன்பாடு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நிரபராதிகள் என நிரூபணமானால், மீண்டும் துறவறம் பூணும் தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் சட்ட ஆலோசனைகள் தர்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. எனவே, அது நடக்கவில்லை.
இந்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மோசமான சம்பவமும் நமக்கு வேதனையைத் தருகிறது. நாம் விகாரையோடு வளர்ந்த ஒரு தேசம். நமது கிராமத்தில் நடைபெற்ற பிரதான விழா பொசொன் விழாவாகும். நமக்கு பௌத்த மதத்தைக் கற்றுக் கொடுத்த பிக்குகள், நமது கிராமத்தின் நாயக்க தேரர்களாவர். அவர்கள் மாலையில் வீதி வழியாக குளத்திற்குச் செல்லும்போது, நாம் அந்த கற்கள் நிறைந்த பாதையில் மண்டியிட்டு வணங்கிய மனிதர்கள். நாம் ஆன்மீகத்தோடு வளர்ந்த மனிதர்கள். நமக்கு தர்மம், நன்மை-தீமை, எதிர்காலம் குறித்து கற்றுக் கொடுத்தவர்கள் பௌத்த தேரர்களே. நமது கிராமத்தில் சிக்கலைத் தீர்ப்பதற்கும் பௌத்த தேரர்களே வந்தார்கள். அதனோடு தொடர்புடைய ஆன்மீகத்தைக் கொண்ட நமக்கு, இந்தச் சம்பவங்கள் வேதனையைத் தருகின்றன.
எனவே, உங்களுடைய மதத்தளங்களில் ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தேவையான அதிகாரங்கள் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். நான் மட்டுமன்றி, மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் இது குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
அந்தச் சம்பவங்களின் அடிப்படையில், இந்த விமோசன தர்மத்திற்கு எதிராக ஏதேனும் ஒன்று இருந்தால், அதை அடிப்படையாகக் கொண்டு ஏதோ ஒரு கட்டமைப்பு உருவாகி வருகின்றது. எனவே, மீண்டும் நம்மைப் பற்றி நாமே சிந்திக்க வேண்டிய ஒரு யுகம் வந்துள்ளது. இல்லையெனில், நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்ட தர்மத்தை நம் கண் முன்னாலேயே அழிய விட்டுவிட வேண்டுமா?
உயிரைப் பணயம் வைத்து உயர் துறவறத்தை பாதுகாப்பதற்காக வரலாற்றில் பாடுபட்ட நமது சங்கத்தினர் இருக்கிறார்கள். நாம் அவர்களை நினைவுகூர வேண்டாமா? நமது அரசர்கள் மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு பாதுகாக்கப்பட்ட தர்மம் நம் கண் முன்னே சிதைக்கப்படுவதை, அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் நாம் நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது பௌத்த சமூகம், பாதிரியார்கள், மௌலவிமார், குருக்கள் என நாம் அனைவரும் பிள்ளைகளின், இளைய தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும், மீண்டும் நமது நாட்டின் மத மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். பாடசாலை மாணவர்கள், பாதுகாப்புப் படையினர் போதைப்பொருள் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போதைப்பொருள் பரவியுள்ளது. ஏன்?
தர்மம், ஒழுக்கம், சீர்குலைந்த இடத்தில் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூகப் பேரழிவுகள் உருவாவதைத் தடுக்க முடியாது. நமது புத்த பெருமானின் புனித முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் இந்த வேளையில், இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன்.
அகில சாசனாரக்ஷக சபையின் முதன்மைப் பொதுச் செயலாளர், உலக இளைஞர் பௌத்த சங்கத்தின் பொதுச் செயலாளர், மாத்தறை மாவட்ட சாசனாரக்ஷக சபையின் செயலாளர் வணக்கத்திற்குரிய முகுனுவெல அனுருத்த தேரர் அவர்கள் அரச வெசாக் விழாவின் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
மகா நாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பௌத்த நாடுகளிலிருந்து வருகை தந்த மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிறிபால மானவடு , பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், முப்படைகளின் பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
