ஹட்டன் SLTB பணிமனை பேருந்துகள் ஒரு வாரமாக முடக்கம்; மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி!
மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள்
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) இயக்கப்படும் சாமிமலை – ஹட்டன் மற்றும் காட்மோர் – மாஸ்கெலியா ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பாடசாலைப் பேருந்துகள் கடந்த ஒரு வார காலமாக இயங்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தினமும் காலை 06.30 மணிக்கு சமிமலை நகரத்திலிருந்து புறப்பட்டு மாஸ்கெலியா வழியாக ஹட்டனுக்குச் செல்லும் பேருந்தும், காலை 06.15 மணிக்கு காட்மோரிலிருந்து புறப்பட்டு மஸ்கெலியா நகருக்குச் செல்லும் பேருந்தும் கடந்த ஒரு வாரமாக சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பேருந்துகள் மஸ்கெலியா நகரில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமியப் பாடசாலைகளுக்கும், ஹட்டன் நகரில் உள்ள பிரபல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் செல்லும் பெருமளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகின்றன.
அத்துடன், மாஸ்கெலியா மற்றும் டிக்கோயா அரசாங்க மருத்துவமனைகளில் நடைபெறும் விசேட மருத்துவ முகாம்கள் மற்றும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த கிளினிக் பரிசோதனைகளுக்குச் செல்லும் நோயாளிகளும் இந்தப் பேருந்து சேவையையே பெரிதும் நம்பியுள்ளனர். இச்சேவை முடங்கியுள்ளதால் அவர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்:
“எங்கள் பிள்ளைகள் மாதப் பயணச்சீட்டு (Monthly Season Ticket) பெற்றுப் பயணிப்பவர்கள். பேருந்து சேவை இல்லாததால், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டியுள்ளது. குறித்த நேரத்திற்குப் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேருந்துகளும் ஒரு வாரம் இயக்கப்படும், அடுத்த ஒரு மாதத்திற்கு இயங்காது என்ற நிலைமையே தொடர்கிறது,” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை பணிமனை அதிகாரிகளிடம் வினவியபோது, பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாகவே சேவைகளை வழமைபோல் முன்னெடுக்க முடியவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தங்களுடைய அன்றாட கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உடனடியாக சமிமலை-ஹட்டன் மற்றும் காட்மோர்-மாஸ்கெலியா ஆகிய வழித்தடங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மீண்டும் வழமைபோல் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்து அமைச்சரிடமும், தொடர்புடைய அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
