நாட்டில் டெங்கு நோய் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், நோய் பாதிப்பு அதிகம் உள்ள வலயங்களில் அமைந்துள்ள அரச, அரை அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் ஒன்றிணைந்து இந்த கல்வி நிறுவனங்களை மூடி, அவற்றின் வளாகங்களைச் சுத்தப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தற்போது மேல் மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் 70,000-க்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், உத்தியோகபூர்வமாக பதிவாகாத நோயாளர்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உச்சமடைந்த பின்னரோ அல்லது உயிரிழப்புகள் அதிகரித்த பின்னரோ பாடசாலைகளை மூடுவதால் எந்தப் பயனும் இல்லை. “குதிரை தப்பிச் சென்ற பிறகு லாயத்தை மூடுவதால் பயனில்லை” என்ற முதுமொழிக்கேற்ப, அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டியது தற்போதைய அவசரத் தேவையாகும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது நிலவும் மோசமான சுகாதார நெருக்கடி குறித்து எச்சரித்த விசேட வைத்திய நிபுணர், பல வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிப்பதற்கான இடவசதி பற்றாக்குறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக டெங்கு நோயாளர்கள் கட்டில்களுக்கு அடியிலும், வைத்தியசாலை தாழ்வாரங்களிலும் (Corridors) தங்கி நின்று சிகிச்சை பெறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நெருக்கடியால் சுகாதார ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உரிய சுகாதார வசதிகள் போதியளவு கிடைக்காமையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
