தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதியை, தனது உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி ஒருவரே இந்த நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அஸ்வெசும நிவாரணத்திற்குத் தாங்கள் தகுதியுடையவர்களாக இருந்தும் பணம் கிடைக்கவில்லை எனப் பயனாளிகள் அளித்த முறைப்பாட்டை அடுத்து, பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் மேற்கொண்ட விசாரணையில் இந்தப் பண மோசடி கண்டறியப்பட்டு, தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியைப் பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் மேற்கொண்டுள்ளார்.
குறித்த வங்கிக் கணக்கு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடியின் மொத்தத் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகக் கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று அதிகாரிகளைக் கைது செய்ய ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
