நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரித் திட்ட ஊழல் மோசடி தொடர்பில், மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் தகுதியான குடும்பங்களுக்குச் சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவுகள், உரியவர்களுக்கு வழங்கப்படாமல் உத்தியோகஸ்தர்களின் சொந்த மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஏனைய நபர்கள் மீதும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட செயலாளரகத்தின் விசேட தணிக்கைக் குழுவினர் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சதீஸ்
