தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் மறைவு!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –
தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளராக 2010 ஆம் ஆண்டு பணியாற்றிய மஹிந்த மடிஹஹேவவின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாகவும், தொழில் அமைச்சகத்தின் செயலாளராகவும், ஊழியர் நம்பிக்கை நிதி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடிய பல சந்தர்ப்பங்களில், மஹிந்த மடிஹஹேவ அதற்கு உறுதுணையாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்த அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரது மறைவு பெரும் இழப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், தனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த மடிஹஹேவவின் இறுதிக் கிரியைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ள உள்ளதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
