பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் எந்தவொரு முயற்சியையும் மலையக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் உப தலைவரும் பதுளை மாவட்ட அமைப்பாளருமான பகி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் பலாங்கொட ப்ளான்டேஷனுக்கு உட்பட்ட இறப்பர் உற்பத்தி பெருந்தோட்டங்களின் சில பிரிவுகளான, இங்குருகமுவ மற்றும் பசறை ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கவோ அல்லது தனியார்மயப்படுத்தவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவே அவர் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார உரிமைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தொழில் பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கும் என்று பகி பாலசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக மலையக தொழிலாளர் முன்னணி சார்பில், பதுளை தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் பெருந்தோட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையைக் கைவிட்டு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எத்தகைய தனியார்மய முயற்சியையும் உறுதியுடன் எதிர்ப்பதுடன், தேவையேற்படின் அனைத்துத் தொழிற்சங்க மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பகி பாலசந்திரன் தனது ஊடக அறிக்கையின் மூலம் எச்சரித்துள்ளார்.
[செய்தி சேகரிப்பு:] இந்தச் செய்தியை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் நடராஜா மலர்வேந்தன்.
