மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜித கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களணி பகுதியைச் சேர்ந்த இந்த வங்கி அதிகாரி, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்தும், சந்தேகநபர் தனது வாகனத்தில் தேரரை இராஜகிரியவில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
ஞானசார தேரர் தப்பிச் செல்வதற்கு உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் சந்தேகநபர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
சமர்ப்பணங்களை பரிசீலித்த முதன்மை நீதவான், சந்தேகநபரை ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
