நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் பொதுமக்கள் மத்தியில் வீண் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய வதந்திகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டார். எனவே, இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் குறித்தும் அமைச்சர் கருத்துப் பகிர்ந்துகொண்டார்.
அதன்படி, காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் மேலும் 400 மெகாவாட் கொள்ளளவை (Capacity) தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
