கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று இடம்பெற்ற (15)இந்தச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என கினிகத்தேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தமையினால், முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மற்றைய பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதில் பயணித்த பயணியொருவர் தெரிவித்தார்.
குறித்த பேருந்துகளில் உயர்தரப் பரீட்சை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் பயணத்துள்ளனர். எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அந்தப் பயணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தெய்வாதீனமாக இரு பேருந்துகளில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கினிகத்தேனைப் பொலிஸார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
