சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பாக, நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு அதிகாரிகளும் அவர்கள் கடமையாற்றும் வங்கி வளாகங்களுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வங்கி முகாமையாளர்கள் இவ்வாறான பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரியால், கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு வாராந்தம் லஞ்சப் பணம் வழங்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
