ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட, ‘சமித்புர சது’ என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியிருந்து கொண்டு இலங்கையில் தீவிர குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நபர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த கைது மற்றும் மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஓமான் நாட்டில் வசித்து வந்த நிலையில் அங்கு கைது செய்யப்பட்ட 28 வயதுடைய ‘சமித்புர சது’ என்றழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர், பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 28 வயதான இந்த நபர் மீது கொலைச் சம்பவங்கள், மிரட்டல்கள் மற்றும் பல்வேறு தீவிர குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவரைக் குறித்த மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
