அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்த இரண்டு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்பிற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமூலம் ஒன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன்பின்னர், எவரேனும் இந்நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும்.
இதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கும்.
இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையானது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
அதேபோன்று, நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் 62 ஆக உயர்த்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த இரண்டு சட்டமூலங்களும் இன்று பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு எதிராகத் தீவிர எதிர்ப்பை வெளியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நேற்று மாலை கூடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதற்கமைய, குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதுடன், அந்த மனுக்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வைக் (Full Bench) கூட்டுமாறு கோரிக்கை விடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
