தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் நாளாந்த வருகைக் கொடுப்பனவை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்கி வருகிறது. எனினும், பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக மற்றும் 60 வயதைக் கடந்த தொழிலாளர்கள் பலரும் இந்தத் தொகையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாிகத் தரவுகளின்படி சுமார் 73 ஆயிரத்து 500 தொழிலாளர்களே தற்போது இந்தக் கொடுப்பனவைப் பெறுகின்றனர். ஆனால், சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக இருக்கக் கூடும் எனவும், எனவே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணபதி கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவை 500 ரூபாவாக உயர்த்துவதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களும் தனியார் தோட்ட உரிமையாளர்களும் அதற்கேற்ற வகையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் சம்பள நடைமுறை திருத்தப்பட்டு, அது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
