ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (16) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, சந்தேகநபருக்கு பிணை வழங்குவது குறித்த உத்தரவு செப்டம்பர் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இச்சம்பவத்தில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், குற்றச்சாட்டுக்களை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் சுட்டிக்காட்டினார்.
