அப்புத்தலை தங்கமலை தோட்டத்தில் வீடுகள் மீது தொடரும் கல்வீச்சுத் தாக்குதல்கள்: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!
அப்புத்தலை – தங்கமலை தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், பொலிஸார் தமது முறைப்பாடுகளைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த அச்சுறுத்தல் சூழல் குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“நேற்றைய தினமும் எமது வீட்டின் மீது தொடர்ச்சியாக கற்கள் வீசப்பட்டன. இந்தச் திடீர் தாக்குதலாலும் பயங்கர சத்தத்தாலும் எனது சிறு குழந்தை சற்று நேரம் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகித் தவித்தது. பாதுகாப்பற்ற சூழலில் எமது வாழ்வாதாரமும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது”என வேதனையுடன் தெரிவித்தார்.
புதிதாகக் குடியேறியுள்ள மக்களின் அமைதியைக் குலைக்கும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணமும் தொடரும் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகளும், உரிய நிர்வாகத் தரப்பினரும் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட எளிய தோட்டக் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
