ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தின் புதிய வேலைத்திட்டமாக 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 2023/2024 கல்வி ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவு ரீதியாகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பாராட்டப்பட்டனர்.
அதன்போது, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் உயர் சித்திகளைப் பெற்ற தலா பத்து மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன், இம்முறை அந்தத் தொகையை இருபது மாணவர்களாக அதிகரித்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதன்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 3,000 க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பாராட்டப்படவுள்ளதுடன், ஒவ்வொரு மாணவருக்கும் 100,000 ரூபா நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
நாட்டின் எதிர்காலத்தைக் பொறுப்பேற்கத் தயாராகும் இளம் சந்ததியினரின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதும் அவர்களின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான பலத்தை வழங்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-09-22

