இன்றைய சிறார்களின் கனவுகளைப் பாதுகாப்பதே நாளைய நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு!
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜீவன் தொண்டமான் வாழ்த்து!
*01.10.2026*
சிறுவர் தினத்தை முன்னிட்டு, அனைத்து சிறார்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது அன்பான சிறுவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு குழந்தையின் கனவும், எதிர்கால சமூகத்தின் கனவாகும்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகள் ஒரு நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாது, அந்த நாட்டின் இன்றைய நம்பிக்கையும் நாளைய வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் திகழ்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
சிறார்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்போது மட்டுமே ஒரு நாட்டின் எதிர்காலம் வலுவானதாக அமையும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தங்களது கனவுகளை நனவாக்கவும் தேவையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனம், மதம், மொழி, பிரதேசம் அல்லது பொருளாதார நிலை போன்ற எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி, அனைத்து சிறார்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்க வேண்டும்.
குறிப்பாக, மலையகச் சிறார்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் தொடர்ந்தும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அவர்களின் கனவுகளுக்கு தடையாக உள்ள பொருளாதார மற்றும் சமூக ரீதியான சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இன்றைய சிறார்களின் கனவுகளைப் பாதுகாப்பதே நாளைய நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான முதலீடாகும்.
அனைத்து சிறார்களுக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும், சிறந்த எதிர்காலமும் நிறைந்த இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் என ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஊடகப்பிரிவு
(ஜீவன் தொண்டமான் – பா.உ)
