கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பிக்குகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தே, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களைக் கைதுசெய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார். பிடியாணை பிறப்பிப்பதற்கான போதிய காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், பொலிஸார் தேவைப்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
