CCTV கமராவில் பதிவான கொள்ளைச் சம்பவம் – ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு பணம் திருட்டு
ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் திருட்டு மற்றும் உடைப்பு சம்பவங்களுக்கு மத்தியில், இன்று (25) அதிகாலை நகர மத்தியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (24) இரவு சுமார் 1.00 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணப் பெட்டியையும் உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடர்கள் விற்பனை நிலையத்திற்குள் நுழையும் காட்சி முதல் பணப் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் வரை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV பாதுகாப்புக் கமரா அமைப்பில் பதிவாகியுள்ளன.
இன்று காலை விற்பனை நிலையத்திற்கு வந்த அதன் உரிமையாளர், பிரதான கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சோதனையிட்டபோது திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் வர்த்தகர்களின் பாதுகாப்பு தொடர்பான கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா
