கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய கௌரவ அதிபராகக் கல்வியாளர் திரு. வடிவேல் முத்தையா அவர்கள் நேற்று (25.11.2026) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மலையகக் கல்வி வளர்ச்சியில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள இவர், வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கி, பின்னர் போஹில் தமிழ் வித்தியாலயம் மற்றும் கடியன்லேன தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கௌரவ அதிபராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து, தரம் – 1 அதிபருக்கான தகுதியுடன் வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்திற்கே அதிபராக நியமனம் பெற்று, அப்பள்ளியின் பௌதிக வளங்களை மேம்படுத்தியதோடு பல புதிய கல்விசார் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துப் பாடசாலையைச் சகல வளங்களும் கொண்ட முன்மாதிரிப் பாடசாலையாக மாற்றியமைத்தார்.
அவரது பதவிக்காலத்தில் வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி பாடசாலைச் சமூகத்தினராலும் பொதுமக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.
எமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்படும் இவரது அனுபவமும், ஆளுமையும், நிர்வாகத் திறனும் கம்பளை இந்துக் கல்லூரியின் பௌதிக மற்றும் கல்விசார் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும் எனக் கல்விச் சமூகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புதிய பொறுப்பினை ஏற்றுள்ள அதிபர் திரு. வடிவேல் முத்தையா அவர்களின் கல்விப் பணிப்பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளைக் குவிக்கவும் மலையகச் சமூகம் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
