Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

November 27, 2026

திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

November 27, 2026

சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி
இலங்கை

நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

ThanaBy ThanaNovember 27, 2026No Comments5 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி*

 

இலங்கையின் கடற்றொழில் துறையை நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் துறைகளில் ஒன்றாக மாற்றுவதுடன், 2030ஆம் ஆண்டளவில் இத்துறையின் ஏற்றுமதி வருமானத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் கீழ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தொடர்பான விவாதம் இன்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

கடந்த காலங்களில் முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட கடற்றொழில் அமைச்சையும் அதன் கீழுள்ள நிறுவனங்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்குப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், தற்போது அந்தச் சவால்களைக் கடந்து துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடிந்துள்ளது.

 

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடற்றொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் 285 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட நிலையில், தற்போது அது 320 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதனை 2030ஆம் ஆண்டளவில் குறைந்தது 600 முதல் 700 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிலைக்குக் கொண்டுசெல்வதுடன், இத்துறையைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

கடற்றொழில் அமைச்சின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை கணிசமான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 7,000 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு, 2024ஆம் ஆண்டு 10,000 மில்லியன் ரூபாவாகவும், 2025ஆம் ஆண்டு 10,668 மில்லியன் ரூபாவாகவும், 2026ஆம் ஆண்டு 16,635 மில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்காக 24,024.50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பயனாகவே இந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், இதன்மூலம் கடற்றொழில் துறையின் அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 

அரசாங்கத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பும் இராஜதந்திர உறவுகளும் இல்லை என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன. சர்வதேச உதவித் திட்டங்கள் ஊடாக 5,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான உதவிகள் கிடைத்துள்ளன.

 

ஜப்பான், தென்கொரியா, ஜேர்மனி, இந்தியா, சீனா மற்றும் நோர்வே உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO, உலக வங்கி மற்றும் ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான JICA உள்ளிட்ட நிறுவனங்களும் இலங்கையின் கடற்றொழில் துறைக்கு பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சீனோர் நிறுவனத்தைப் புனரமைப்பதற்காக 230 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 420 மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக 232 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேச ஒத்துழைப்புகள் இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும் அதன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவியாக அமையும்.

 

கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கியதுடன், மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தற்போது மீண்டும் செயற்பாட்டுத் திறனைப் பெற்றுள்ளன. இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனமான CFC நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததுடன், ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் பணிக்கொடை போன்ற கொடுப்பனவுகளைக்கூட வழங்க முடியாத நிலையில் இருந்தது. எனினும், நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தற்போது அதனை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க முடிந்துள்ளது.

 

அதேபோன்று, மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சீனோர் நிறுவனமும் தற்போது இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. NARA உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களையும் வினைத்திறனுடன் இயங்கக்கூடிய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல நிறுவனங்களில் நிலவிய ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கும் அமைச்சரவைத் தீர்மானத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

 

இதற்கிடையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் மக்கள் எதிர்கொண்டுவந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாகக் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் பவுஸர்கள் கடல் வழியாக நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமைத்துவத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

அத்தோடு, டித்வா புயலினால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், நாட்டுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்திய இந்த அனர்த்தத்தின் மத்தியிலும் வெளிப்பட்ட மனிதாபிமான ஒற்றுமை பாராட்டத்தக்கது. குறிப்பாக, கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும் குறைபாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தித்வா புயல் அனர்த்தத்தின்போது அவர்கள் அர்ப்பணிப்புடனும் தியாக உணர்வுடனும் செயற்பட்டுள்ளனர். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை அரச ஊழியர்கள் தமது செயற்பாடுகள் மூலம் நிரூபித்துள்ளனர். இலங்கைக்குள் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிடைத்த மனிதாபிமான உதவிகளும் ஒத்துழைப்புகளும் இந்த ஒற்றுமைக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளன.

 

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கும், துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளதுடன், விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் கடற்றொழில் துறையின் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும்.

 

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதன் மூலம் நாட்டின் கடல் வளங்களுக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தியாவின் புதுடில்லிக்குச் சென்று அந்நாட்டின் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில் நிரந்தரத் தீர்வொன்றைக் காண எதிர்பார்க்கப்படுகிறது.

 

மீனவ மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குறுகிய காலத்திற்குள் ஒரே தடவையில் தீர்வுகாண முடியாது. இருப்பினும், அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் எதிர்கொள்ளும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

கடற்றொழில் துறையைச் சார்ந்து வாழும் 12 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதுறைகள் மற்றும் மீன் சந்தைகளை நவீனமயப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் விரிவான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் மூலம் மீனவ மக்கள் பயன்பெறக்கூடிய புதிய உட்கட்டமைப்பு வசதிகளையும், மேம்பட்ட சந்தை வாய்ப்புகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

 

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், கடற்றொழில் துறையின் உண்மையான நிலைமை தொடர்பில் ஆக்கபூர்வமானதும் யதார்த்தமானதுமான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டால் அவற்றைக் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். அதேவேளை, விவாதத்தில் கருத்துகளை முன்வைத்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்த்து, துறையின் முன்னேற்றத்திற்கான ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கடற்றொழில் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பல புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்து, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்கும் வகையில் கடற்றொழில் துறையை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

 

 

க.கிஷாந்தன்,

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரின் ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    ‘டிட்வா’ சூறாவளி ஓராண்டு நினைவு: உயிரிழந்தோருக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

    November 27, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026

    போலி வங்கி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபா மோசடி: சந்தேகநபர் கைது

    November 27, 2026
    Editors Picks

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026

    பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு

    November 27, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026

    சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.