இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.
இலங்கையில் கடந்த காலங்களில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு அமைய, இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
பத்தரமுல்லையிலுள்ள விவசாய அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்;ற இந்த கலந்துரையாடலில், விவசாய அமைச்சு, தேசிய மிருககாட்சிசாலை திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் காணப்படுகின்ற சட்ட நிலைமை குறித்து ஆராயும் நோக்கிலான அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் மிருகங்களில் குரங்கு முதன்மை இடத்தை வகிக்கின்றது.
இந்த நிலையில், குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டன.
அவ்வாறான நடவடிக்கைகள் தோல்வியை சந்தித்த நிலையில், இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளினால் வடமேல் மாகாணத்திலேயே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் விளை நிலங்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களுடன் ஒப்பிடுகையில், குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றமை மகிழ்ச்சி அளிக்கும் விடயம் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
