சட்டவிரோதமான முறையில் 15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 6 கிலோ 996 கிராம் தங்கத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றில் 4 கிலோ 942 கிராம் தங்க பிஸ்கட்களும், 2 கிலோ 942 கிராம் நகைகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருதானையைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர் அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகரொருவர் எனவும் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துக் கொண்டு, சுங்க வளாகத்தில் இருந்து வெளியே வந்த அவர், விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
