பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுவிட்டர் பதிவொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும், வரை அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றை கோரியிருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந் கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த உத்தரவை கையளித்தனர். அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாகுமாறு முன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான இந்த அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தான் கொழும்பிற்கு பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
