ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினர் இன்று (7) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு வீதி காவல் நிலையங்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், அந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் வன்முறைச் சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தனது உத்தரவில் பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.