தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவை நகரைச் சுற்றி நேற்றிரவு பொலிஸ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்ததையடுத்து நகருக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கைது செய்யப்பட்ட நபரின் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார் உப பொலிஸ் பரிசோதகர்
அதன்பின்னர் திரும்பி மோட்டார் சைக்கிளை எடுத்து வரச் சென்ற போது மோட்டார் சைக்கிள் அங்கு காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தில் உள்ள பைனஸ் காட்டு பகுதியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ஏற்கனவே முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் தியத்தலாவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ராமு தனராஜா

