இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை -சீனன்குடா முகாம் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முற்பகல் 11.25 மணியளவில் பயிற்சிக்காக புறப்பட்ட விமானம் முற்பகல் 11.27 மணியளவில் விழுந்து நொறுங்கியது.
விமான பயிற்சி கடமைகளுக்காக அதில் பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஏற்கனவே விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
