கேகாலை பெருந்தொட்ட நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் தொடர்பில் தொழில் திணைக்களத்தில் 16/10/2023 நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவு பெறாமல் முடிவுற்றது.
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல ,லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்தும் நடாத்தப்படுகின்ற அகிம்சை வழி போராட்டத்திம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வேதும் கிடைக்கப் பெறாமையினால் (16)கொழும்பு தொழில் திணைக்களத்திலும் தொழில் ஆணையாளர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது .
கலந்துரையாடலுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மற்றும் கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இலாபக் கொடுப்பனவு மற்றும் வேலை நிறுத்தப்பட்ட 16 நாட்களுக்குரிய வேதனம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கங்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கேகாலை பெருந்தோட்ட நிர்வாகத்தின் தரப்பில் இருந்து சாதகமான பதில் ஏதும் கிடைக்கப் பெறாமையினாலும் முடிவு எடுப்பதற்குரிய உயரிய அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேட்காமையினாலும் பேச்சு வார்த்தை முடிவின்றி நிறைவுற்றது.
எது எவ்வாறாக இருந்த போதிலும் முடிவு கிடைக்கப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டிலேயே பாதிக்கப்பட்ட தொழிலாளர்ளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.
இந்த கலந்துரையாடலின் போது முதலாளிமார் சம்மதினத்தின் பிரதிநிதி ஒருவர் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தீவிரவாதிகளை போல் நடந்து கொள்கின்றார்கள் என தெரிவித்திருந்தார் உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் யுத்த காலங்களிலும் ஆயுதம் ஏந்தாமல் நாட்டிற்காக உழைத்த மக்கள் தங்களுடைய உரிமைகளை கேட்பது எந்த வகையில் தீவிரவாத செயல்பாடு ஆகும் என கேள்வி எழுப்பியதோடு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கூற வேண்டுமென்று அழுத்தத்தையும் ஆக்ரோஷமாக முன் வைத்திருந்தார்.
உடனே முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி மன்னிப்பு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

