2024ம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக (10.01.2024) கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் குறிப்பாக, இலங்கையிலுள்ள பிரதான மீன் கருத்தரிப்பு மத்திய நிலையங்களான உடவளவ்வ, தம்புளை, செவனபிட்டிய, றம்படகல்ல, இங்கினியாகலை உள்ளிட்ட கருத்தரிப்பு மத்திய நிலையங்களின் அபிவிருத்திக்காக 100 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி அவற்றில் நன்னீர் கருத்தரிப்பு மத்திய நிலையங்களை தொடங்குமாறும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வட மாகாணத்திற்காக கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களை விரைவில் தயாரித்து தமக்கு அனுப்புமாறும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், நன்னீர் மீன் வளர்ப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து அதனூடாக கிடைக்கும் வருமானத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைத்துக் கொள்வதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் எனவும், ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு தெரிவித்த அமைச்சர், தான் விரைவில் பிரதான கருத்தரிப்பு மத்திய நிலையங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது அங்கு நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.