மஸ்கெலியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6ல் கல்வி கற்ற 11 வயதுடைய மாணவன் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற விபத்து காரணமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த பகுதியில் உள்ள Rose field தோட்டத்தின் கட்டிடப் பணிக்காக கான்கிரீட் உருளைகளை (Congrid silinder) பாடசாலை வளாகத்தில் இன்று வைத்துவிட்டு சென்றுள்ளனர். பாடசாலை மாணவர்கள் அப்பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த உருளை ஒன்று வழுக்கி, சிறுவன் மீது விழுந்ததன் காரணமாக சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
இருந்த போதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் 03ல் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இன்று பகல் 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மஸ்கெலியா காட்மோர் தம்பேதென்ன தோட்டத்தில் வசித்து வந்த இச்சிறுவனின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வளர்க்கப்பட்டு வந்துள்ளான்.
வெளிப்பிரதேசங்களின் கட்டிட நிர்மாண பணிக்காக கொண்டுவரப்பட்ட இப்பொருட்களை பாடசாலையில் அதிபரின் அனுமதியோடு வைக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ம ஸ்கெலியா போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா.