ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை நியமிப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானபிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல தீர்மானம் எடுப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியினர் அச்சமின்றி வெளியில் செல்லக்கூடிய வேலைத்திட்டத்தை தமது கட்சி தற்போது நடைமுறைப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று (7) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடல் முடிந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரின் பதில்கள் பின்வருமாறு.
கேள்வி – மொட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்- மொட்டின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது.
கேள்வி – இன்று எதைப் பற்றி பேசப்பட்டது?
பதில் – கட்சியின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடப்பட்டது. கட்சியினர் அச்சமின்றி வெளியே செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
கேள்வி – மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரில் இன்னும் தாமதம் ஏன்?
பதில் – கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலுக்கு 45 நாட்களே உள்ள நிலையில் வந்தார், எனவே எமக்கு அவகாசம் உள்ளது. சரியான நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும்.
கேள்வி- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களா அந்த வேட்பாளரை நியமிப்பது?
பதில் – அப்படி இல்லை. கட்சி என்ற முறையில் முடிவு எடுக்கப்படும். மகிந்தவின் தீர்மானங்கள் ஒருபோதும் தவறாக மாட்டாது. இந்த முறையும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
கே. தேர்தல்கள் உள்ளதா?
பதில் – தேர்தல்கள் உள்ளன. நாங்கள் ஒருபோதும் சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்ய மாட்டோம்.
கேள்வி- இந்தத் தேர்தல் சவாலாக இருக்குமா?
பதில் – எந்தத் தேர்தலும் சவால்தான். சவால் இல்லாமல் தேர்தல் இல்லை. நாம் எப்போதும் கடினமான பகுதியைப் பற்றி சிந்தித்து வேலை செய்தால் வெற்றி எளிதானது.
கேள்வி- அரசாங்கத்துடனான மொட்டின் பயணம் எவ்வாறு உள்ளது?
பதில்- நாங்கள் அரசாங்கத்தை பலப்படுத்துகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்தில் இருந்து நாடு முன்னேறியுள்ளது. அந்த நிலைக்கு கொண்டு வர தியாகங்கள் செய்தோம். கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
கேள்வி- எதிர்வரும் காலம் ஜனாதிபதியுடன் செல்லுமா?
பதில்- ஆம்.. இன்னும் அப்படித்தான். நாளை பற்றி எதுவும் சொல்ல முடியாது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
2024.05.07