-இ.தொ.கா ரூபன் பெருமாள் வலியுறுத்தல்-
இரத்தினபுரி மாவட்டத்தின் ஹேயஸ் தோட்டத்தில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற தோட்டத் தொழிலாளராகிய சுப்ரமணியம் ராஜலிங்கம் அவர்களை இன்று காலை வேளையில் குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் தாக்கியமையானது மிகவும் கண்டனத்துக்குரிய விடயமாகும்.
தாக்குதலுக்குள்ளான ஓய்வுப் பெற்ற தோட்டத் தொழிலாளர் தற்போது கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பில் அவரது மகள் மற்றும் குறித்த பிரதேச மக்கள் சம்பவம் தொடர்பாக எனக்கு தெரிவித்ததையடுத்து, இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கையெடுக்குமாறு இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தினேன்.
மேலும், அவருடனான தொலைபேசி உரையாடலின் போது, இரத்தினபுரி மாவட்டத்தின் சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும், தோட்ட முகாமைத்துவங்களுக்கும் இடையில் காணப்படும் நட்புறவினை பயன்படுத்தி தோட்ட அதிகாரிகள் பெருந்தோட்ட மக்களை தாக்கும் கலாச்சாரத்தினை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன் என இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
