பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund) பங்களிப்பதற்கான அவகாசம் 2024 ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த ரமழான் நோன்பு மாதத்தில் இந்த நிதிக்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் இன, மத பேதமின்றி இதனுடன் கைகோர்த்தனர்.
இந்த நிதியத்திற்குப் பங்களிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு மக்களிடம் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 2024 மே மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்வதற்கான அவகாசம் மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தாலும், நன்கொடையாளர்கள் இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பணம் வைப்புச் செய்வது அவதானிக்கப்பட்டது. இந்த நிதியத்திற்கு தொடந்தும் பணம் வைப்புச் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2024 ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கில் ஏதேனும் வைப்புத்தொகை நேரடியாக செலுத்தப்பட்டால், அந்தத் தொகை சமூக நலன்புரித் திட்டங்கள் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நிதியில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, இவ்வருடம் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெறப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளித்தார்.
2024 ஜூலை 31ஆம் திகதி வரை பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளும் எதிர்வரும் நாட்களில் பலத்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.
இதேவேளை, இந்த நிதியத்துடன் மனிதாபிமான ரீதியில் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளன.