பால்நிலை அடிப்படையிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்காக
பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு: கேகாலை மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்றது.
பால்நிலை மற்றும் பால்நிலையில் அடிப்படையிலமைந்த துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளை தடுக்கும் 16 நாள் உலகளாவிய செயற்பாட்டின் ஒரு கட்டமாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறையை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கத்தை கண்டி சமூக அபிவிருத்தி நிர்வகம் USAID நிதியுதவியுடன் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில், கேகாலை மாவட்டத்தில் உள்ள 20 பெருந்தோட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். பெருந்தோட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அடிமைத்தனம், சுதந்திரமின்மை, பாலியல் கொடுமை, துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தைக் குறைத்து, அவர்களைச் சுயமாக திறம்பட செயல்பட ஊக்குவிப்பதற்கான கருத்துக்களும் செயல்பாடுகளும் இங்கு வழங்கப்பட்டன.
மேலும் இந்த கருத்தரங்கின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் முறைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து தெளிவூட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெருந்தோட்டப் பெண்கள் மிகவும் ஆர்வமாகவும் செயல்பாட்டில் ஈடுபட்டு, தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் பகிர்வதிலும் முன் வந்தனர்.
கேகாலை மாவட்டத்தில் இந்த விதமான கருத்தரங்கம் முதல் முறையாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








