கேகாலை மாவட்டத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் கிளை காரியாலயம் திறப்பு
கேகாலை, மே 2 — இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கேகாலை மாவட்டத்துக்கான கிளை காரியாலயம் இன்று எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச பொதுமக்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மனித உரிமை ஆணையாளர் மற்றும் குழுவின் அதிகாரிகள் கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்து, பெருந்தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து நேரில் தகவல்கள் சேகரித்திருந்தனர். குறிப்பாக, எட்டியாந்தோட்டையில் நடந்த சந்திப்பின்போது, மொழி குறித்த சிக்கல்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றியோர் விரிவான விளக்கத்தை பொதுமக்கள் ஆணைக்குழுவிடம் வெளியிட்டனர்.
அதன்பேரில், கேகாலை மாவட்டத்தில் ஒரு பிராந்திய கிளை காரியாலயத்தை நிறுவுமாறு மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கேற்ப, இந்த காரியாலயம் இன்று திறக்கப்பட்டது.
திறப்பு விழாவின்போது, மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை அதிகாரிகளிடம் நேரில் முன்வைத்தனர். அதற்கமைய, மக்கள் புகார்களை ஆராய்ந்து, இயன்ற தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய கிளை காரியாலயம், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய நியாயம் மற்றும் உரிமைகளை நிலைநிறுத்தும் முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


