ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகள் அலஸ்கா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்குள் நுழைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவாய், ஓஹு தீவின் கடற்கரையில் உள்ள ஹலீவாவில் நீர்மட்டம் 4 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவாய் மாநிலம், அலஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் வடக்கு கலிபோர்னியாவின் சில பகுதிகள் ஏற்கனவே சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளதுடன், அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி அலைகள் ஏற்கனவே அலாஸ்காவிற்குள் நுழைந்துவிட்டதாகவும், சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளையும் அடையத் தொடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு அமெரிக்காவின் பிற மாநிலங்களையும் சுனாமி அலைகள் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மக்கள் ஏற்கனவே தயாராகி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பல பகுதிகளுக்கு சுனாமி அலைகள் அண்மிக்கும் நேரங்களை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11:35 மணிக்கு ஓரிகான் மற்றும் வொஷிங்டனையும், இரவு 11:50 மணிக்கு கலிபோர்னியாவையும், அதிகாலை 12:40 மணிக்கு சென் பிரான்சிஸ்கோ விரிகுடா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தையும் சுனாமி அலைகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
