வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் – கல்பிட்டி, முகத்துவாரம் அருள்மிகு வேல் முருகன் திருக்கோயில்

கல்பிட்டியில் கோயில் கொண்ட கந்தா வேல்முருகா
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வந்திடைய்யா
உன்னருளால் நாமென்றும் உயர்நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா

தேடியுன்னை நாடிவரும் அடியார்க் கருளுகின்ற கந்தா வேல்முருகா
காத்திருக்கும் எங்களை காத்தருள வந்திடைய்யா
வேற்றுமை களைந்து நாமென்றும் உயர் நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா

மேற்கிலங்கைக் கரையினிலே வந்துறையும் கந்தாவேல் முருகா
மேன்மை நிலை நாம் பெறவே அருள்தர வந்திடைய்யா
வெறுப்புணர்வு இன்றி நாம் உயர்நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா

வேல்தாங்கி நின்றிருந்து அருள் பொழியும் கந்தா வேல்முருகா
வேதனைகள் அற்ற நிலை நாம் பெறவே வழியமைக்க வந்திடைய்யா
புரிந்துணர்வு கொண்டோராய் நாம் உயர்நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா
கல்பிட்டி முகத்துவாரம் காட்சி தரும் கந்தா வேல்முருகா
கவலையின்றி நாம் வாழ வழி காட்ட வந்திடைய்யா
குற்றமற்ற வாழ்வு வாழ்ந்து நாம் உயர்நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா
விநாயகருக் கிளையோனாய் வந்துதித்த கந்தா வேல்முருகா
வெற்றியுடன் வாழும் வழி பெற எமக்கு வழிகாட்ட வந்திடைய்யா
சுற்றமெல்லாம் சிறப்புற்று நாம் உயர்நிலையைப் பெற்றுவிட
கருணை செய்வாய் காத்திடுவாய் கல்பிட்டியுறை வேல்முருகா.
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.