யாழ்ப்பாணம்: அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பம் தொடர்பில் தெரிவதாவது : இன்று (10) அதிகாலை அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டினர். எனினும், வேன் நிறுத்தப்படாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றது.
துப்பாக்கிச் சூடு: தொடர்ந்து தப்பிச் சென்ற வேனை நிறுத்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனம் முயற்சித்தது. எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் மீறி வேன் சென்றதால், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதன் சாரதி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கைது மற்றும் விசாரணை: குறித்த வேனில் பின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
