கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினத்துடன் நிறைவடைகின்றன. கடந்த காலங்களில் பரீட்சை முடிந்த கையோடு மாணவர்கள் பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது போன்ற வன்முறைப் போக்குகள் அவதானிக்கப்பட்டன.
இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
பரீட்சை நிலையங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் குழுக்களாக இணைந்து வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க விசேட ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
பரீட்சை முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தேவையற்ற கொண்டாட்டங்கள் அல்லது மோதல்களில் பிள்ளைகள் ஈடுபடுவதைத் தவிர்க்க பெற்றோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
