சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதான எழுத்தர் ரூ. 20 மில்லியன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையின் படி, சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதான எழுத்தர் ஒருவர் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 2026.03.04 அன்று பிற்பகல் 1.15 மணியளவில் சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான வாடகை கொடுப்பனவு காசோலைகளை எவ்வித தாமதமுமின்றி வழங்குவதாக உறுதியளித்து, அதற்குப் பகரமாக ஏழு சந்தர்ப்பங்களில் காசோலைகள் மூலம் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
