உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) இது தொடர்பான அதிகாரப்பூர்வ அனுமதியை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி பாதிப்புகளே அமெரிக்காவின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய கடல்சார் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முற்றுகையிட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்கா வழங்கியுள்ள இந்தச் சலுகை இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு தற்காலிக உந்துதலாக (Boost) அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
