இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் புதிய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிக்குச் சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் புதிய முகாமைத்துவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், கடந்த மார்ச் 09 முதல் மின்சார சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாகத் தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவது அனைத்து ஊழியர்களினதும் சட்டப்பூர்வமான கடமையாகும் எனவும், பணிக்குச் சமூகமளிக்க மறுப்பது பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் கடும் உத்தரவு
தற்போது மின்சார சபையின் பணிகள் பின்வரும் நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன:
இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL)
நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP)
இந்த நிறுவனங்களின் முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில், சில ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணிக்கு வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை
“புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், அதன் காரணமாக ஊழியர்கள் தமது தற்போதைய கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்,” என முகாமைத்துவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
