3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி (Online) ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
சமூகத் திறன் பாதிப்பு
கல்வி உளவியலின்படி, 3-5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கற்றல் செயல்பாடுகள், நேரடிச் சமூகத் தொடர்புகள் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சூழலிலேயே அமைய வேண்டும். திரையைப் பார்த்து கல்வி கற்பதால் சிறுவர்களின் சமூகத் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் (Concentration) குறைவடையவும் இது காரணமாகிறது.
மூளை வளர்ச்சிக்குத் தீங்கானது
சிறுவர்களை அதிகளவில் தொழில்நுட்பக் கருவிகளுக்கு உட்படுத்துவது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மூளை வளர்ச்சிக்குத் தீங்கானது என அமைச்சு எச்சரித்துள்ளது. எனவே, இத்தகைய வயதுப் பிரிவினருக்கு இணையவழி வகுப்புகளை நடத்துவதை அமைச்சு எவ்விதத்திலும் அங்கீகரிக்கவில்லை.
பெற்றோருக்கான அறிவுறுத்தல்
வர்த்தக நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்வாறான ஆன்லைன் கருத்தரங்குகளால் சிறுவர்களின் கல்வித் தரம் உயராது எனவும், அது அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாக அமையும் எனவும் அமைச்சு பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
“ஒரு குழந்தையின் சிறந்த ஆசிரியர் சூழலும் நேரடி அனுபவங்களுமே தவிர டிஜிட்டல் திரை அல்ல” என அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இவ்வாறான ஆன்லைன் வகுப்புகளில் அவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
