வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
திக்கெட்டும் ஆட்டுவிக்கும் பேரருளே சிவனே
திருவருளை நாடுகின்றோம் கருணை செய்வாய் ஐயா
தீவினைகள் போக்கியெம்மைக் காத்தருளும் சிவனே
அருள் தந்து எங்களுக்கு வாழ்வளிப்பாய் ஐயா
தேடிவந்து உன்பாதம் தொழுகின்றோம் சிவனே
திருவருளை வழங்கியெம்மைக் காத்தருள்வாய் ஐயா
பாடித் துதித்துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
பாதகங்கள் போக்கியெம்மை ஆதரிப்பாய் ஐயா
இவ்வுலகில் எமக்குத் துணை நீயன்றோ சிவனே
ஏற்றமிகு பெருவாழ்வை எமக்களிப்பாய் ஐயா
அண்டமெல்லாம் ஆளுகின்ற ஐயனே சிவனே
ஆதரித்து அரவணைத்துக் காத்திடுவாய் ஐயா
நால்வேதப் பொருளாக மிளிருகின்ற சிவனே
நாம் படும் துன்பங்களைப் போக்கிடுவாய் ஐயா
திக்கின்றித் தவிப்போர்க்கு வழி காட்டும் சிவனே
திசைகாட்டி வழிநடத்திக் காட்டிடுவாய் ஐயா
அழகுமிகு திருக்குளத்தை உடையவனே சிவனே
அச்சமில்லா வாழ்வு தந்து ஆதரிப்பாய் ஐயா
கேட்ட வரம் தந்தருளும் பேரருளே சிவனே
தொல்லையில்லா வாழ்வுதனைத் தந்தருள்வாய் ஐயா
தான்தோன்றீசுவர ரென்ற பெயர் கொண்ட சிவனே
தளராத மனவுறுதி தந்தருள்வாய் ஐயா
ஒட்டுசுட்டான் நன்நிலத்தில் கோயில் கொண்ட சிவனே
ஒற்றுமையாய் நாம்வாழ வழியமைப்பாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.