தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!
பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு தோட்டப் பிரதேசங்களிலும் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ (People’s Safety Committees) அமைக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பதில் கடமை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (21) மாலை 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சுந்தரலிங்கம் பிரதீப் அவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கான பாதுகாப்புச் சூழலை பலப்படுத்துவதையும், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர் (IGP), பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIGs) மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் (Plantation Companies) சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், மலையகப் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்று தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
