நுவரெலியா: நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அருகே இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி பாரிய சுமைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றின் தடையாழி (Brake) திடீரெனச் செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் எனத் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆபத்தான வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, முன்னால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் வண்டி ஆகியவற்றுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் பயணித்தவர்கள் எவ்வித உயிரிழப்புமின்றி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற ‘திட்வா’ சூறாவளி காரணமாக, ஹக்கல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதி சேதமடைந்து தாழிறங்கியிருந்தது. அந்த குறுகிய மற்றும் ஆபத்தான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதால், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நீண்ட நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செ.திவாகரன்
