செ.திவாகரன்
நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்.
நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் திரு. தனுஷ்கா ஆகியோரின் தலையில் குறித்த ஆரம்ப நிகழ்வு சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை தூரமானது 85 கிலோமீட்டர் கொண்டதும் சுமார் 3 மணித்தியாலயமும் 15 நிமிடங்கள் எடுக்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது .
டித்வா புயலின் தாக்கம் மலையக ரயில் மார்க்கத்தில் எதிரொலித்த நிலையில் மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவைகள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.
டித்வா சூறாவளியால் கடும் சேதமடைந்த பதுளைக்கும் அம்பேவலைக்கும் இடையிலான ரயில் சேவை 23 நாட்கள் கடும் பிரயத்தனத்தின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களால் இந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் இதற்கு முன்னர் பதுளையிலிருந்து அம்பேவெல வரையிலான பகுதிகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன இதற்கமைய, இன்று சனிக்கிழமை முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 ரயில் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் இறுதிக்குள் மலையக ரயில் பாதை கொழும்பிலிருந்து பதுளை வரை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் சிரேஷ்ட மாவட்ட ரயில்வே நிர்வாகப் பொறியாளர் தனுஷ்கா ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையில் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து பயணத்தை தொடங்கினர்.
